குஜராத், ஜூலை.11-
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும், 40 ஆண்டு கால பழமையான பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. மஹிசாகர் ஆற்றில் உள்ள காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததில், லாரி, வேன், ஆட்டோ என ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.
இதில், குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மேலும் ஐந்து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மாயமான இரண்டு பேரின் உடல்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், ஆற்றின் அடியில் தேடுகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.








