கோலாலம்பூர், நவம்பர்.14-
தாய்லாந்து - கம்போடியா எல்லையில், மீண்டும் உருவாகியுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டுத் தலைவர்களிடமும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையில், கம்போடிய பிரதமர் Hun Manet -னும், தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul-லும், கடந்த மாதம் ஆசியானில் செய்து கொள்ளப்பட்ட கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தைப் பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைகளிலும், அங்கு நட்பு மலர செய்வதிலும், மலேசியா எப்போதும் துணை நிற்கும் என்று தாம் இரு நாட்டுத் தலைவர்களிடம் தெரிவித்ததாக அன்வார் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலைநாட்ட, மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் மலேசியா, தொடர்ந்து அதன் பங்களிப்பை ஆற்றும் என்று அன்வார் அவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.








