கோலாலம்பூர், அக்டோபர்.24-
வரும் அக்டோபர் 26-ஆம் தேதி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் துவங்கவுள்ள 47வது ஆசியான் உச்சி மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் பலர் வருகை புரியவுள்ளதால் மலேசியாவின் மீது உலகின் கவனம் திரும்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மாநாட்டிற்கு வருகை புரியவுள்ளது சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை பிரேசில் அதிபர் Luiz Inácio Lula da Silva, சீனாவின் துணைப் பிரதமர் He Lifeng, தென்னாப்பிரிக்க அதிபர் Matamela Cyril Ramaphosa உள்ளிட்ட தலைவர்கள் கோலாலம்பூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹி தலைமையில், மலேசியாவில் நடைபெறும் இம்மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும்.
சீனா, ஜப்பான், ரஷ்யா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
அதே வேளையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 2,854 ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளப் பதிவுச் செய்துள்ளனர்.
மலேசியா இதுவரை நடத்திய மிகப் பெரிய சர்வதேச மாநாடுகளில் இதுவும் ஒன்றாகும்.








