வெல்லிங்டன், செப்டம்பர்.26-
இன்று வெள்ளிக்கிழமை காலை 11.5 மணிக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து புறப்பட்ட கந்தாஸ் ஏர்வெய்ஸ் விமானத்தில் திடீரென்று அவசர சமிஞ்கை விளக்கு மினுமினுத்ததைத் தொடர்ந்து விமானிகள் பதற்றம் அடைந்தனர்.
விமானத்தில் தீ ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட்ட விமானி, உடனடியாக "mayday call" என்கிற அவசர உதவிக்கான அழைப்பை விடுத்தார்.
நியூசிலந்தின் ஆக்லண்ட் விமான நிலையத்தில் அவசரச் சேவை வாகனங்கள் விரைவாகத் தயாராயின.
ஆஸ்திரேலிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக கந்தாஸ் ஏர்வெய்ஸ் விமானம் பின்னர் ஓடுபாதையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த 156 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அதிகாரிகள் விமானத்தைச் சோதித்ததில் தீக்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. புகையும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.