மணிலா, நவம்பர்,04-
பிலிப்பைன்சில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுதோறும் 20க்கும் மேற்பட்ட சூறாவளிகள் மற்றும் புயல்களால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்படுகிறது. இதோடு பூகம்பங்களும் நிகழ்வது உண்டு.
இந்நிலையில் அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
சூறாவளிக்கு இதுவரை 26 பேர் பலியாகி இருக்கின்றனர். பலரும், வீடுகள், கட்டடங்களில் ஏறி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளனர். ஏராளமான கார்கள், மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் மூழ்கி உள்ளன.
தெற்கு லெயிடின் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. செபு மாகாணமும் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்து இருப்பதால் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் உதவிகளை மேற்கொள்ள மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர்.








