டெல்லி: பிரான்ஸ் நாட்டில் இந்தியர்களுடன் சிக்கிய விமானம் இப்போது மும்பைக்குத் திரும்பியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயில் இருந்து நிகரகுவா நோக்கிச் சென்ற விமானத்தில் ஆள் கடத்தல் நடந்ததாக பிரான்ஸ் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 300+ இந்தியர்கள் இருந்த அந்த விமானத்தை பிரான்ஸ் அதிகாரிகள் தரையிறக்கினர்.
அங்கே விமானத்தை நிறுத்தி வைத்து சில நாட்கள் வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மொத்தம் 300 பேர் இருந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது.
பிரான்ஸில் பரபரப்பு: பாரீஸுக்கு அருகே வாட்ரி விமான நிலையத்தில் இந்த விமானம் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. ஆள் கடத்தல் புகாரைத் தொடர்ந்து, அந்த விமானத்தை அங்கேயே தடுத்து நிறுத்தி நான்கு நாட்கள் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு இப்போது அந்த ஏர்பஸ் ஏ340 விமானம் 276 பயணிகளுடன் மும்பையில் தரையிறங்கியுள்ளது. இன்று காலை 4 மணியளவில் அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியது.
பிரான்ஸ் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அது மும்பையில் தரையிறங்கியது. மொத்தம் 276 பயணிகளுடன் அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது. அதே நேரம் விமானத்தில் இருந்த ஐந்து சிறார்கள் உட்பட 27 நபர்கள் பிரெஞ்சு மண்ணில் அகதிகளாக இருக்கப் புகலிடம் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.