பெய்ஜிங்: சீனாவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 111 பேர் பலியான நிலையில் அடுத்ததாக 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பது ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு ஓடினர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமாகின. சுமார் 5 ஆயிரம் கட்டடங்கள் வரை உருக்குலைந்துள்ளன. இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 111 பேர் வரை பலியாகினர். மேலும் 400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த 2 மாகாணங்களில் மீட்பு பணி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் சின்ஜியாங் பகுதியில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் பகுதியில் இந்த நிலநடுக்கம் 5.5 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. அங்கு ஏற்பட்ட சேதபாதிப்புகள் குறித்த விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை.