வாஷிங்டன், ஜனவரி.06-
போதைப் பொருள் குற்றச்சாட்டுகளில் நான் குற்றவாளி அல்ல. நான் இன்னும் ஒரு நாட்டின் அதிபர்தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அதிபர் மடுரோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர் தான் மடுரோ. இவர் பஸ் டிரைவர் ஆக இருந்து, தற்போது அதிபர் ஆக உயர்ந்து இருக்கிறார். இவரையும், இவரது மனைவியையும் அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. தற்போது அவர்கள் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அரசு அவர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அது தொடர்பான வழக்குகள் நடைபெற்றது. நியூயார்க் நீதிபதி முன்பு ஆஜரான நிக்கோலஸ் மடுரோ, தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
நீதிமன்றத்தில் மடுரோ பேசுகையில், ''போதைப் பொருள் குற்றச்சாட்டுகளில் நான் குற்றவாளி அல்ல. நான் இன்னும் ஒரு நாட்டின் ஜனாதிபதி தான். நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன். என்னைச் சிறை பிடித்துவிட்டனர்'' எனத் தெரிவித்தார்.
போதைப் பொருள் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர்கள் என மடுரோவும், அவரது மனைவியும் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கின்றனர். இந்த வழக்கில் இதுவரை நீதிபதி ஆல்வின் ஹெலெர்ஸ்டைன் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இந்த வழக்கில் அடுத்த விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.








