வாஷிங்டன்: இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா வைரசின் புது வகை ஜே.என்.1 துணை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி விட்டு சென்றது.
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பு பொருளாதார பாதிப்பு என மக்களை நிலைகுலையை வைத்த கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்த தொடங்கிய பிறகே கட்டுக்குள் வந்தது. அதன் பிறகும் கொரோனா வைரஸ் உருமாறி அவ்வப்போது அதிவேகமாக பரவினாலும் பாதிப்பு என்பது துவக்கத்தில் இருந்தது போல இல்லை.
இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. ஏற்கனவே இதன் காரணமாக கர்நாடக அரசு 60 வயதைக் கடந்தோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மீண்டும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க உள்ளதாக அறிவித்துவிட்டது.