பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் சில காரணங்களுக்காகத் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் முதன்மையானது பிரான்ஸ்… அங்கே இப்போது இம்மானுவேல் மக்ரோன் அதிபராக இருக்கிறார். மேலும், எலிசபெத் போர்ன் என்பவர் பிரதமராக இருந்து வந்தார்.
அங்கே இப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிரான ஒரு மனநிலையே இருக்கிறது. தேர்தல் இப்போதைக்கு இல்லை என்ற போதிலும், மக்களின் எதிர்ப்பு மனநிலையைச் சமாளிப்பது குறித்து அவர் யோசித்து வந்தார்.
இம்மானுவேல் மக்ரோன்: இதற்காக இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரவும் திட்டமிட்டார். இதற்கிடையே அந்நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல காலம் இழுபறி நடந்த நிலையில், ஒரு வழியாக போர்ன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
இருப்பினும், 34 வயதே ஆன கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் அடுத்து பிரதமராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டால், பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பை அவர் பெறுவார். எலிசபெத் போர்ன் நேற்று ராஜினாமாவை அதிபரிடம் சமர்பித்ததாகவும் அதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் பிரான்ஸ் அதிபர் அலுவலகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.