Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஈரான் சிறைபிடித்த கப்பல், கேரள பெண் உள்பட 17 இந்தியர்கள் தவிப்பு
உலகச் செய்திகள்

ஈரான் சிறைபிடித்த கப்பல், கேரள பெண் உள்பட 17 இந்தியர்கள் தவிப்பு

Share:

ஈரான், ஏப்ரல் 16-

வளைகுடா பகுதியில் ஈரான் கைப்பற்றிய இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் சிறைபிடித்துள்ள அந்த கப்பலில் உள்ள அன்டெசா ஜோசப் என்ற அந்த பெண்ணின் குடும்பத்தினர், உள்ளுர் டி.வி சேனல்களில் காட்டப்பட்ட வீடியோவில் கூறிய தகவலின்படி, கப்பலில் உள்ள லின் ஊழியர்களில் அவரும் இருந்ததாகக் கூறினார். ஆனால் வெளியுறவு அமைச்சகத்திற்கு கேரள முதல்வர் எழுதிய கடிதத்தில் தங்கள் மகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இதையடுத்து, முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் அந்த பெண் இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் இதுபற்றி அவர்கள் அறிந்ததும், இந்த விவகாரம் மத்திய அரசிடம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார். குடியுரிமை பெறாத கேரள மக்கள் விவகாரத் துறைக்கும் (NORKA) தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

அந்த கடிதத்தில் தனது மகளின் பெயர் இல்லாதது வேதனையை ஏற்படுத்தியதாகவும், மனதளவிலும் தன்னை இந்த விஷயம் பாதித்ததாகவும் அந்த வீடியோவில் அந்த பெண்ணின் தந்தை கூறியுள்ளார். அந்த பெண்ணின் குடும்பதினர் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகளின் தற்போதைய நிலை குறித்து மாநில அல்லது மத்திய அரசுகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று தந்தை கூறியுள்ளார்.

“அந்த கப்பலுக்குச் சொந்தமான நிறுவனம் தான் எனது மகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தது. மேலும் அவர் தனது மகளிடம் கடைசியாக வெள்ளிக்கிழமை பேசியதாக கூறினார். "அவர் தினமும் காலையில் தவறாமல் போன் செய்வார். ஆனால் வெள்ளிக்கிழமைக்கு மறுநாள் அவர் போன் பேசாததால், நாங்கள் அவரை அழைக்க முயற்சித்தோம்".

"ஆனால் எங்களால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் மதியம், கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் அழைத்த போது தான், நடந்ததை எங்களிடம் கூறினார்," என்று அவர் கூறினார். இதற்கிடையில், சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளை தெஹ்ரான் "விரைவில்" அனுமதிக்கும் என்று ஈரான் கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் 13 சனிக்கிழமையன்று ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் புரட்சிகர காவலர்களால் MSC Aries என்ற அந்த கப்பல் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News