வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஐயோவாவில் நடந்த உட்கட்சி தேர்தலில் அதிபர் டிரம்ப் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், முன்னதாக டிரம்ப் அங்கே பேசிய சில கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பலரும் களத்தில் உள்ளனர்.
குறிப்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
டிரம்ப்: இந்த அதிபர் தேர்தலில் தற்போது வரை டிரம்ப் தான் முன்னிலையில் இருக்கிறார். இதற்கிடையே திங்களன்று நடந்த ஐயோவா பகுதியில் பேசிய டிரம்ப் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார். ஐயோவா பகுதியில் கடுமையான குளிர் நிலவும் நிலையில் அதைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், "நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை.. எனக்கு வாக்களித்துவிட்டு இறந்து போங்கள்.. அப்போது தான் நீங்கள் மதிப்புக்குரியவராக இருப்பீர்கள்" என்றார்.
மேலும், இந்தாண்டு இறுதியில் நடக்கும் அதிபர் தேர்தலில் தன்னை வெற்றி பெற வைத்தால் அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிப் பாதையிலும் நாட்டின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகவும் மாற்றிக் காட்டுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன: ஐயோவாவில் வானிலை மிக மோசமாக இருக்கும் நிலையில், வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்தான சூழல் இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருந்தது. இருப்பினும், அங்கே குடியரசு கட்சியின் உட்கட்சி தேர்தல் நடக்கும் நிலையில், டிரம்ப் இப்படிப் பேசியுள்ளார். ஐயோவாவில் கடுமையான குளிர் மற்றும் பனி நிலவும் நிலையில், டிரம்ப் 3 பிரச்சார கூட்டங்களை ரத்து செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.