Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு! அதிபர் ஜோ பிடன் வரவேற்பு!
உலகச் செய்திகள்

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு! அதிபர் ஜோ பிடன் வரவேற்பு!

Share:

அமெரிக்கா, ஜூன் 06-

டொனால்ட் டிரம்ப்பிற்குரிய தண்டனை விவரங்கள் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோன்ற வழக்கில் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றிவாளி என அறிவிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை.

டொனால்ட் டிரம்ப் மீது நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தொடர்ந்த வழக்கில், ட்ரம்ப் 2006ஆம் ஆண்டு தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், 2016ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலின்போது இதைப்பற்றி வெளியில் கூறாமல் இருக்க தனக்கு 1,30,000 டாலர் பணம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ட்ரம்ப் தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோர்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்ததாகத் தெரியவந்தது. அமெரிக்கச் சட்டப்படி நடிகைக்கு பணம் கொடுத்தது தவறு இல்லை என்றாலும், அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது தனக்கு உதவும் வகையில் செய்த செலவை சட்ட செலவுகள் என தேர்தலில் ஆவணங்களில் குறிப்பிட்டது அவரைப் பிரச்சினைக்கு உள்ளாக்கியது.

இதனால், டிரம்ப் பணம் கொடுத்தது அமெரிக்க பெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டனர். தொடர்ந்து, போலியான வணிகப் பரிவர்த்தனைகளை ட்ரம்ப் பதிவு செய்திருக்கிறார் என்று 34 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்டன.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய நியூயார்க் நடுவர் நீதிமன்றம் ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதனால், அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றச்செயலில் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை. டிரம்ப்பிற்குரிய தண்டனை விவரங்கள் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

அமெரிக்கச் சட்டப்படி, போலி வணிகப் பரிவர்த்தனை வழக்குகளில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே வந்து பேசிய டிரம்ப், "நான் மிகவும் அப்பாவி. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்புக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறேன். என்ன நடந்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இது ஒரு மோசமான விசாரணை. நவம்பர் 5ஆம் தேதி மக்கள் உண்மையான தீர்ப்பை அளிப்பார்கள்" என்று கூறினார்.

இதனிடையே, அதிபர் ஜோ பைடன் நியூயார்க் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று நாம் பார்த்திருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related News