Sep 13, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை
உலகச் செய்திகள்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

Share:

இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்த 'பாலஸ்தீன ஆக்ஷன் குழுவைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்களுக்கு பிரிட்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதனை ஒரு பயங்கரவாதச் செயல் என்று வர்ணித்த நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள எல்பிட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திற்குள் புகுந்த இந்த நான்கு பேரும் அங்கிருந்த கணினிகள், ட்ரோன்கள் மற்றும் இதர உபகரணங்களைச் சுத்தியலால் அடித்து உடைத்து, 10 லட்சம் பவுண்டுகளுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. காசா பகுதியில் மக்களைக் கொல்வதற்குக் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தடுத்து நிறுத்துவதே தங்களின் நோக்கம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரைச் சுத்தியலால் தாக்கி அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சாமுவேல் கார்னர் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற மூவரான சார்லோட் ஹெட், லியோனா காமியோ ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகளும், பாத்திமா ரஜ்வானி என்பவருக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related News