புத்தாண்டு 2026-ஐ வரவேற்கும் உற்சாகத்தில் மலேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சன்வே லகூன் களைகட்டியது. டிசம்பர் 31ஆம் நாள் மாலை 6 மணி முதலே குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீம் பார்க்கில் குவியத் தொடங்கினர். நள்ளிரவு வரை நீடித்த இந்தக் கொண்டாட்டத்தில் வண்ணமயமான வானவேடிக்கைகளும் மிக சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
வழக்கத்திற்கு மாறாக, இந்தப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சன்வே லகூன் நிர்வாகம் தீம் பார்க் முழுவதையும் நள்ளிரவு வரை திறந்து வைத்திருந்தது. இதனால் பார்வையாளர்கள் அனைத்து விளையாட்டுகளையும், நீர் சறுக்குகளையும் நீண்ட நேரம் அனுபவிக்க முடிந்தது. இந்தத் திடீர் அறிவிப்பு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 வயது ரீனா ஆல்பர்ட் என்பவர், தனது கணவர், இரு குழந்தைகளுடன் சன்வே லகூனுக்கு வந்திருந்தார். "மலேசியாவிற்குச் சுற்றுலா வரும்போது இணையதள விமர்சனங்களைப் பார்த்தேன், அனைவரும் சன்வே லகூனைப் பரிந்துரைத்தனர். குழந்தைகளுக்கான பல சுவாரஸ்யமான விளையாட்டுகள் இங்கு இருப்பதால் இதையே தேர்ந்தெடுத்தோம். நள்ளிரவில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டது மறக்க முடியாத அனுபவம்," என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உள்ளூர்வாசியான 38 வயது சந்தியா சுந்தரேசன் கூறுகையில், "ஆரம்பத்தில் வானவேடிக்கைகளைப் பார்க்கத்தான் வந்தேன், ஆனால் இங்குள்ள இசை நிகழ்ச்சிகளும் சவாரிகளைப் பார்த்ததும் எல்லாவற்றையும் முயற்சி செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டது," என்றார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வனவிலங்கு பூங்காவில் புலிகள், சூரிய கரடிகள், நீர்நாய்கள் ஆகியவற்றுக்கு உணவு ஊட்டும் அங்கமும் நடைபெற்றது. குறிப்பாக, புலிகளுக்கு உணவு ஊட்டும் அங்கம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.
வனவிலங்கு கல்வியாளர் திமோதி ஜேம்ஸ் மா இது குறித்துப் பேசுகையில், "பார்வையாளர்கள் விலங்குகளுடன் நெருங்கிப் பழகவும், அவற்றின் இயற்கை வாழ்விடத்தைப் புரிந்து கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்காளப் புலிகள் உள்ளிட்ட ஆறு வகையான புலிகளும் இன்று அழியும் நிலையில் உள்ளன. வேட்டையாடுதல் காரணமாக இவை பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன என்ற விழிப்புணர்வையும் நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம்," என்றார்.
நள்ளிரவு மணி 12-ஐத் தொட்டதும், வானத்தைப் பிளந்து கொண்டு வண்ணமயமான வானவேடிக்கைகள் வெடித்துச் சிதறின. சன்வே லகூனின் சின்னங்களான கேப்டன் குவாக், லேடி குவாக், கோகோ, பேபே ஆகியோருடன் பார்வையாளர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
எதிர்காலத்தில் மேலும் பல புதிய விலங்கு வாழ்விடங்களை அறிமுகப்படுத்தி, பார்வையாளர்களுக்கு இன்னும் சிறந்த அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சன்வே லகூனில் தொடங்கிய 2026 புத்தாண்டு, அனைவருக்குமே ஒரு புதுமையான மற்றும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்தது.









