கோலாலம்பூர், அக்டோபர்.24-
பிராந்தியம் முழுவதும் இணையத்தை அடிப்படையாகக் கொண்டு, சைபர் குற்றச்செயல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நாடு கடந்த மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த அனைத்துலக ஒருங்கிணைப்புத் தளமாக கோலாலம்பூரில் தொடங்கவிருக்கும் 47வது ஆசியான் உச்ச நிலை மாநாடு விளங்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் இத்தகைய சைபர் குற்றச்செயல் மோசடிகளைச் சமாளிக்க அவற்றின் திறன் ஆற்றல் மேம்பட்டுள்ளது. ஆனால், ஆசியான் நாடுகள் இன்னும் நிறையவற்றைச் செய்ய வேண்டியுள்ளது என்று சிங்கப்பூரின் எஸ். ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வியல் பள்ளியின் ஆய்வாளர் ஆஷா ஹெம்ரஜனி கூறுகிறார்.
இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் காண்பது, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது மற்றும் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதில் சீரான மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் இருக்க வேண்டும்.
அது குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தவதற்கும், விவாதிப்பதற்கும் சிறந்த களமாக 47 ஆவது ஆசியான் மாநாடு விளங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஆய்வாளர் ஆஷா ஹெம்ரஜனி தெரிவித்துள்ளார்.








