டெல்லி: இந்தியாவின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகும் நிலையில், அவர் மும்பையில் அரங்கேற்றிய மிக மோசமான குண்டுவெடிப்பு குறித்து நாம் பார்க்கலாம். 1980, 1990களில் மும்பையில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராஹிம் கடந்த சில ஆண்டுகளாகப் பாகிஸ்தானில் இருந்து வந்தார். பாகிஸ்தான் இதை மறுத்தாலும், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்யும் விதமாகத் தொடர்ச்சியாகப் பல தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது அடையாளம் தெரியாத நபரால் தாவூத் இப்ராஹிம் விஷம் வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் பரவின. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தாவூத் இப்ராஹிம்: இந்தியாவில் அதிகம் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தாவூத் இப்ராஹிம், ஒட்டுமொத்த நிழல் உலகையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இருப்பினும், அவர் குறித்து இதுவரை ஓரிரு போட்டோ மட்டுமே வெளியாகியுள்ளது. மேலும், பல முக்கிய புள்ளிகளாலும் கூட அவரால் நேரடியாகப் பேச முடிந்தது இல்லை. அந்தளவுக்கு நிழல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் நபராகவே தாவூத் இப்ராஹிம் இருந்தார்.