மண்டாலே, ஏப்ரல்.01-
மியான்மரில், கடந்த மார்ச் 29ம் தேதி, ரிக்டர் அளவுகோலில், 7.7 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர, 3,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என ஐயுறப்பசுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டு, மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போதுதான் மீட்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன. சாலைகளில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் வாயிலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல நாடுகளில் இருந்தும் வந்துள்ள மீட்புப் பணி நிபுணர்கள், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து, கர்ப்பிணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில், 60 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில், மீட்புப் படையினர் அவரை மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு உள்ளதால், தங்களுடைய பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.








