ஜாவா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று தவாவத் தீவுகளில் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்றான தலாவத்தில் இன்று அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தலாவத் தீவுகளைத் தாக்கியுள்ளது என இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம், நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 4.75 அட்சரேகையிலும் 126.38 தீர்க்க ரேகையிலும் உள்ளது. பூமிக்கு அடியில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சரியாக இன்று அதிகாலை 2:18 மணியளவில், அட்ச ரேகை: 4.75, தீர்க்க ரேகை: 126.38, ஆழம்: 80 கிலோ மீட்டரில் இந்தோனேசியாவின் தலாவத் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது." என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீடுகள், கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த வாரம் 7.6 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை தாக்கியது. இதில் அதிகளவிலான உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டன.
ஜப்பானில் கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய நிலநடுக்கமாக அது பார்க்கப்பட்டது. இதில் குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர், 200 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக ஜப்பானின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் உள்கட்டமைப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஹோகுரிக்கு என்ற பகுதியில் 23,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெரும் சேதம் காரணமாக இன்னும் பல பகுதிகள் மீள முடியாத நிலையில் உள்ளன.