அமராவதி, நவம்பர்.02-
இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 ஐ விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நேற்று மாலை துவங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காகவும், இந்திய கடற்பரப்பு உள்ளிட்ட கடல்பிராந்தியங்களை கண்காணிக்கவும் பயன்படும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு தகவல்களை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.








