சிங்கப்பூர், ஜூலை.22-
ஜோகூர் கடற்பாலத்தைத் தாண்டி சிங்கப்பூருக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர்கள் நேற்று காலையில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம், சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் இடையூறுகளை ஏற்படுத்தியது.
உள்ளூர் பேருந்து நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதையும், அது காலை 6.30 மணிக்கு நடந்ததையும் அரசாங்கப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுத் தலைவர் முகமட் ஃபஸ்லி முகமட் சால்லே உறுதிப்படுத்தினார். பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளைச் சிங்கப்பூருக்குள் கொண்டுச் செல்ல மறுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலை எட்டு மணிக்குள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. போராட்டத்தின் போது பயணிகள் தொடர்ந்து சிங்கப்பூருக்குள் தங்கள் பயணத்தைத் தொடர, நாங்கள் மற்ற பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்தோம் என்று ஃபஸ்லி கூறினார்.
இருப்பினும், சில பயணிகள் நடந்தே ஜோகூர் கடற்பாலத்தைத் தாண்டிச் செல்ல முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.
நடந்து சென்றவர்கள், போராட்டத்தில் கலந்து கொண்ட பேருந்து ஓட்டுநர்கள் ஆகியோரின் எண்ணிக்கை குறித்து சரியாகத் தெரியவில்லை.
சில ஓட்டுநர்களுடன் சம்பளக் கணக்குப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதலால் இடையூறு எழுந்ததாக எல்லை தாண்டிய பேருந்து நிறுவனமான கோஸ்வேய் லின்க் தெரிவித்தது.








