சிங்கப்பூர், செப்டம்பர்.17-
ஜோகூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் மோட்டாரோட்டிகள், தங்களது மின் சிகரெட் கருவிகளை காஸ்வே பகுதிகளில் வீசி எறிந்து விட்டுச் செல்வதால், அந்த இடம் மின் சிகரெட்டுகளால் நிறைந்த குப்பைக் கூளமாக மாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதே வேளையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், Etomidate என்ற இரசாயணப் பொருள் கொண்ட Kpod என்ற மின் சிகரெட்டுகளை C வகை போதைப் பொருளாக சிங்கப்பூர் அரசு பட்டியலிட்டுள்ளதால், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
18 வயதிற்குட்பட்டோர் இந்த Kpod மின் சிகரெட்டுகளுடன் பிடிபட்டால் முதல் தடவை 500 டாலர் அபராதமும், இரண்டாவது முறை பிடிபட்டால் 700 டாலர் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டுப்பாட்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், போதைப்பொருட்களை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவதற்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.