கோலாலம்பூர், அக்டோபர்.26-
மலேசியா-அமெரிக்கா இடையே சமீபத்தில் கையெழுத்தான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், 1,711 மலேசியப் பொருட்களுக்கு அமெரிக்காவின் 19 விழுக்காடு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளது. இந்தச் சலுகை அடுத்த 60 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா மலேசியாவிற்குத் தனது சந்தைக்கான மிகவும் உறுதியான, சிறந்த அணுகலை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்பதால், இந்த ஒப்பந்தம் மின்சாரம், மின்னணுப் பொருட்கள், தொழில்துறைக் கருவிகள், விண்வெளி தொழில்துறைக்கானப் பாகங்கள் போன்ற முக்கிய ஏற்றுமதிகளுக்குப் பயனளிக்கும் என்றார்.








