ஆமதாபாத், நவம்பர்.24-
எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதால், கண்ணூர்-அபுதாபி பயணிகள் விமானம் ஆமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.
கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E 1433, அபுதாபிக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக அமைதியாக இருந்த ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்துச் சிதறியது.
இதன் சாம்பல் வான்வெளியில் கலந்து, அதன் தாக்கம் வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவை நோக்கி இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கண்ணூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானம் உடனடியாக ஆமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
எரிமலை வெடிப்பு வான்வெளியில் விமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. அதன் காரணமாக, டில்லி மற்றும் ஜெய்ப்பூர் வான்வெளியில் ஏதேனும் தாக்கம் ஏற்படலாம் என்பதால் விமான போக்குவரத்து அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் கண்காணித்து வருகின்றன.








