Jan 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

கும்பமேளாவில் 31 பேர் பலியான விவகாரம்; இதுவரை எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யவில்லை

Share:

பிரயாக்ராஜ், பிப்.4-

இந்தியா, பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியான சம்பவம் குறித்து இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று உத்தரபிரதேச டிஜிபி தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கடந்த 29ம் தேதி மவுனி அமாவாசையன்று (தை அமாவாசை) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படவிருகிறது.

அச்சம்பவம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில், குழுவொன்று அமைக்கப்பட்டது. மேற்கண்ட விசாரணை ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டு வருகிறது. இந்த விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆணையம் தனது விசாரணையை விரைவாக முடிக்க முயற்சிக்கும் என்று ஆணையத்தின் தலைவர் ஹர்ஷ் குமார் தெரிவித்தார். இந்நிலையில் சம்பவ நாளில் நடந்த கூட்ட நெரிசல் குறித்து உத்தரபிரதேச காவல்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

கூட்ட நெரிசல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகுப்பாய்வு செய்து வருகிறது. இது உத்தரபிரதேச டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், ‘கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கியது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இவற்றை பகுப்பாய்வு செய்து வருகிறோம். கூட்ட நெரிசல் குறித்து இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. உத்தரபிரதேச காவல்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது’ என்று கூறினார்.

Related News