துபாய்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக அதன் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகர் துபாயில் சிக்கி உள்ளார்.
வடஇந்திய மாநிலங்களில் பெரிதாக பேசப்பட்டு வரும் மோசடி என்றால் அது மகாதேவ் சூதாட்ட செயலி மோசடியாகும். இந்த மோசடியில் பல அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு எல்லாம் முக்கிய காரணம் யார் என்றால் 2 பேர்.
அதாவது சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவரது நண்பர் ரவி உப்பால். இவர்கள் 2 பேரும் துபாய் சென்ற நிலையில் போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கான சூதாட்ட செயலியை உருவாக்கினர். இந்த செயலியின் பெயர் தான் மகாதேவ்.
இந்த மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களான சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. செயலியை புரோமோஷன் செய்வதற்கான அரசியல் கட்சி தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஹவாலா பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதோடு இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் துபாயில் தலைமைறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் அமலாக்கத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் துபாய் அதிகாரிகளுடன் அமலாக்கத்துறையின் தொடர்பில் இருந்து வந்தனர்.