ஷிம்லா, அக்டோபர்.07
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பொதுச் சொத்துகளுக்கும், அரசுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் பிலாஸ்பூர் மலைப்பகுதியில் 30 பேருடன் பேருந்து சென்று கொண்டு இருந்த போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சகதியுடன் பாறைகளும் சரிந்தன. இதில் சிக்கிய பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தை உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. பேருந்தில் இருந்து இன்னும் சிலர் மீட்கப்பட வேண்டி உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.