Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஹவாய் தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீ! உயிருக்கு பயந்து கடலில் குதித்த மக்கள்.. 53 பேர் பலியான சோகம்
உலகச் செய்திகள்

ஹவாய் தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீ! உயிருக்கு பயந்து கடலில் குதித்த மக்கள்.. 53 பேர் பலியான சோகம்

Share:

ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால் அதிலிருந்து தப்பிக்க கடலில் குதித்தவர்களில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ பரவி வருவதால் மீட்பு படையினர் ஆயிரக்கணக்கானோரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

ஹவாய் தீவின் மிகவும் பிரசித்தி பெற்ற நகரமான லஹைனாவில் இந்த காட்டுத் தீ பரவி வருகிறது. காட்டில் ஏற்பட்ட தீ பலத்த காற்று காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பரவியுள்ளது. தீ பரவியபோது ஹவாயில் அதிகாலை 2.45 மணி இருக்கும். இந்த தீ காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடி ஒளிந்து வருகின்றனர். அமெரிக்காவின் விமானப்படை மற்றும் ஹவாயின் தீயணைப்புத்துறையினர் சேர்ந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இரவு முழுவதும் தீ பரவியதால் ஹவாய் தீவின் மேற்கு பகுதி ஏறத்தாழ துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரேயொரு நெடுஞ்சாலை மட்டுமே இருப்பதால் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இது குறித்து கூறிய உள்ளூர் மக்கள், "இது ஒரு போர்க்களம் போல இருக்கிறது. இப்படி ஒன்றை நாங்கள் இதற்கு முன்னர் பார்த்ததே கிடையாது" என்று கூறியுள்ளனர்.

மீட்பு பணியில் இருப்பவர்கள் கூறுகையில், "இங்கு நீண்ட நாட்களாக வறட்சியான காலநிலை நிலவி வந்தது. காடு முற்றிலும் காய்ந்து கிடந்தது. எனவேதான் தீ வேகமாக பரவுகிறது" என்று தெரிவித்துள்ளனர். இந்த தீவில் மக்கள் தொகை குறைவுதான். ஆனால் பெரும்பாலான வீடுகள் மரத்தில் கட்டப்பட்டிருக்கும். எனவே தீ பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தீவை சுற்றி தண்ணீர் இருந்தாலும் கூட காற்று பலமாக வீசுவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பலரும் இந்த தீயிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்திருக்கின்றனர். தீ பரவத் தொடங்கிய நேற்றிரவு உயிரிழப்பு எண்ணிக்கை 36ஆக இருந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. தீ அச்சுறுத்தலாக இருந்தாலும் கரும்புகை அதை விட பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. காற்று வீசும் திசைகளில் புகை பரவுவதால் தீ எரியும் இடத்திற்கு சில நூறு மீட்டர் தூரம் அப்பால் இருப்பவர்கள் கூட முச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related News