பெஷாவர், ஆகஸ்ட்.16-
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்குப் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் ஐவர் மாண்டதாக Khyber Pakhtunkhwa மாநிலத்தின் முதலமைச்சர் அலி அமின் கண்டாபூர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 227 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அங்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான Mi-17 ரக ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்களை அரசு அனுப்பி வைத்துள்ளது.
கடைகள் வீற்றிருக்கும் ஒரு வளாகத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது மோசமான வானிலை காரணமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் விமானிகளைக் காப்பாற்ற முயற்சித்தனர்.
அதற்குள் எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் வெடித்ததில் விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கார் ஒன்று சேதமுற்றது.