சியோல், ஆகஸ்ட்.14-
கோலாலம்பூரிலிருந்து தென் கொரியாவிற்குப் புறப்பட்ட ஏர் ஆசியா விமானம், தவறான விமான நிலையத்தில் தரையிறங்கி விட்டதாகக் கடுமையான விமர்சனத்திற்கு இலக்காகியது.
தென் கொரியாவில் இன்சியோன் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஏர் ஆசியாவின் D7 506 விமானம், அந்த நாட்டின் கிம்போ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கி விட்டதாகத் தென் கொரியாவின் முன்னணி பத்திரிகையான கொரியா ஹெரால்ட் தெரிவித்தது.
எனினும் விமானம், இன்சியோன் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தாலும் எதிர்பாராத விதமாக விமானம் turbulence எனும் மிகப் பெரிய குலுங்கல் அதிர்வில் சிக்குவதைத் தவிர்க்க வேறு வழியின்றி கிம்போ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் நிலைமையைக் கையாளுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழி முறை குறித்து விளக்கம் அளிக்கப்படாததால் பயணிகளை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கியதுடன் விமானம் தவறான இடத்தில் தரையிறங்கி விட்டதாகக் கடும் விமர்சனத்திற்கு இலக்காக வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அந்தப் பத்திரிக்கை தெரிவித்தது.