பெஷாவர், ஆகஸ்ட்.19-
பாகிஸ்தானில் பருவ மழைக்கு இதுவரை, 657 பேர் பலியாகி உள்ளதாகவும், 1,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய பருவ மழை தீவிரமடைந்து, பஞ்சாப், சிந்து, பெஷாவர், கைபர் பக்துங்க்வா உட்பட பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுகள் நிரம்பி அபாயக் கட்டத்தைத் தாண்டி பாய்கின்றன. பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. குடியிருப்புகளை திடீர் வெள்ளம் சூழ்ந்ததாலும், நிலச்சரிவுகளில் சிக்கியும் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயிருக்கின்றனர்.
நடப்பு ஆண்டு பருவ மழை, அண்மைய வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவுகளில் ஒன்று என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் 26 முதல், பாகிஸ்தான் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில், 657 பேர் இறந்துள்ளதாகவும், 1,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. அதிலும், கைபர் பக்துங்க்வா பகுதியில் மட்டும், 390 பேர் உயிரிழந்துள்ளனர்.