கொழும்பு, டிசம்பர்.01-
இலங்கையில், 'டிட்வா' புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த சூறாவளி காற்றால், இலங்கை கிழக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
கொழும்பு, மட்டக்களப்பு உட்பட நாடு முழுதும் கொட்டிய மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 350க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுஉள்ளனர்.
இங்கு, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவும் வகையில், இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படையின் கப்பல்கள் அந்நாட்டுக்கு விரைந்துள்ளன.
'ஆப்பரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் வாயிலாக, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரு விமானங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் மற்றும் 21 டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் ஒரு விமானத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விமானம், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர பயன்படுத்தப்படும் என விமானப் படை தெரிவித்துள்ளது. விமானப் படைக்குச் சொந்தமான 'எம்.ஐ., 17 - வி 5' ஹெலிகாப்டரும் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








