Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஈரான் அதிரடி ஏவுகணை தாக்குதல்- இன்னும் எத்தனை வந்து விழுமோ? குலைநடுக்க பீதியில் பாகிஸ்தான்!
உலகச் செய்திகள்

ஈரான் அதிரடி ஏவுகணை தாக்குதல்- இன்னும் எத்தனை வந்து விழுமோ? குலைநடுக்க பீதியில் பாகிஸ்தான்!

Share:

இஸ்லாமாபாத்: ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, சட்டவிரோதமாக ஈரான் நடத்திய இத்தாக்குதல் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என கதறியுள்ளது பாகிஸ்தான்.

இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையேயான யுத்தம் தற்போது விரிவடைந்து கொண்டே போகிறது. ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி குழுவினர் ஏமனில் இருந்து இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து செங்கடலில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீதும் ஹவுத்தி குழுவின் தாக்குதல் தொடர்ந்தது. இதேபோல லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து ஏமனில் உள்ள ஹவுத்தி குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். ஆனாலும் செங்கடலில் ஒரு கப்பலையும் இஸ்ரேல் நோக்கி செல்லவிடாமல் அழிப்போம் என அறிவித்தது ஹவுத்தி குழு.

இதனிடையே இஸ்ரேலின் உளவு மையமாக செயல்பட்ட இடம் என ஈராக்கின் முன்னணி தொழிலதிபர் ஒருவர் மாளிகையை ஈரான் அதிரடியாக தாக்கி அழித்தது. ஈராக்கின் குர்து பகுதியில் இத்தாக்குதலை ஈரான் நடத்தியது. ஈராக்கைத் தொடர்ந்து பாகிஸ்தானில் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களையும் ஈரான் இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்து போயுள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர்; 3 பெண்கள் படுகாயமடைந்தனர் என கூறியுள்ள பாகிஸ்தான், ஈரானுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது; பாகிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது; பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல்; இத்தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மேலும் ஈரான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அப்போது, இத்தாக்குதலுக்கான விளைவுகளுக்கு ஈரான்தான் பொறுப்பேற்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related News