கோலாலம்பூர், நவம்பர்.06-
கடந்த மாதம் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய மலேசியா, மாநாட்டின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் செலுத்தப்பட்ட தீவிர கவனம், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பின் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
டொனல்ட் டிரம்ப்புடன் தாம் நேரடி சந்திப்பு நடத்திய போது பாதுகாப்பு அம்சங்களில் மலேசியா குறிப்பாக பாதுகாப்பு படையினர் கொண்டிருந்த திறனை அங்கீகரித்ததுடன் தமது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார் என்ற பிரதமர் குறிப்பிட்டார்.
போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலை தனிப்பட்ட முறையில் நேரடியாகச் சந்தித்து, அவருக்கும் அவர் தலைமையிலான போலீஸ் படைக்கும் வாழ்த்துக் கூற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தமது விருப்பத்தை தெரிவித்ததையும் டத்தோ ஶ்ரீ அன்வார் மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இன்று சைபர்ஜெயாவில் IC Design Park 2 மலேசிய மென்பொருள் அறிமுக விழாவில் உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








