புதுடெல்லி, ஆகஸ்ட்.15-
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழாக் கோலாலமாக இன்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.
செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக் கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.
செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சியே தமது குறிக்கோள் என்றார். இதற்கான முன்னேற்பாடான நடவடிக்கைகள் பல்வேறு துறைகளில் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
புதிய கண்டுபிடிப்புகள் சிந்தனைகளுடன் இந்தியாவின் வளர்ர்ச்சிக்கு துணை நிற்க இளைஞர்கள் முன் வர வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.
இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தக் கட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்குக் கொண்டு வர உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மோடியின் இந்த சுதந்திர தின உரை, புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இன்று அவர் 103 நிமிடங்கள் சுதந்தர தின உரை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது 98 நிமிடங்கள் பேசியதுதான் சாதனையாக இருந்தது. இன்று அந்த தனது சாதனையை மோடியே முறியடித்து புதிய சாதனைப் படைத்து இருக்கிறார்.
நேருவுக்கு அடுத்தபடியாக அதிக தடவை சுதந்திர தின கொடி ஏற்றியவர் என்ற சிறப்பு மோடிக்குக் கிடைத்து உள்ளது. பிரதமர் மோடி போன்று 1947- ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றியுள்ளார் என்பது வரலாறாகும்.