பெய்ஜிங், ஜூலை.29-
சீனாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 30க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. சுமார் 80,000 பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். தலைநகர் பெய்ஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மியுன், யாங்கிங் ஆகியப் பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. ஒரே இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கும் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பாதிக்கப்பட்ட 80,000 மக்கள் பெய்ஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 17,000 பேர் மியுன் பகுதி மக்கள் ஆவர்.
ஒட்டு மொத்தமாக மழை,வெள்ளத்திற்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.








