பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகளுடன் ரயில் திடீரென கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தை கடத்துவது, ரயிலைக் கடத்துவது போன்ற சம்பவங்களை நாம் சினிமாவில் தான் பார்த்து இருப்போம். உள்ளே புகுந்து பயணிகளைப் பணைய கைதிகளாக வைத்து மிரட்டும் காட்சிகளைப் பார்த்தாலே திக்திக் என இருக்கும்.
ஆனால், இப்படியொரு சம்பவம் தான் இப்போது ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் நீட்டித்த இந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
ரயில் கடத்தல்: இதற்கிடையே நேற்று வியாழன் இரவு சுவிட்சர்லாந்தின் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலைக் கடத்திய அந்த நபர் கோடாரி மற்றும் கத்தியை ஆயுதமாக வைத்துள்ளார். மேலும் அவர் ஃபார்ஸி மற்றும் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் தனது தேவைகளை போலீசாருக்கு கூறி மிரட்டியுள்ளார். போலீசார் ஆரம்பத்தில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இருப்பினும், ஒரு கட்டத்தில் ரயில் உள்ளே அதிரடியாக நுழைந்த போலீசார் அந்த கடத்தல்காரரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து பணைய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் ரயிலின் உள்ளே புகுந்த போது அவர்களைத் தாக்கக் கோடாரியுடன் அந்த நபர் பாய்ந்ததாகவும் இதனால் வெறு வழியில்லாமல் சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.