ஒட்டாவா: அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார்.பஞ்சாபைத் தனியாக காலிஸ்தான் என்ற நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற பிரிவினைவாத இயக்கங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிநாடுகளில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் அங்கே இதுபோன்ற பிரிவினைவாதிகள் வெளிப்படையாகவே இயங்கி வருகிறார்கள். சிலர் அங்கிருந்தபடி இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களும் திட்டமிடுவதாகப் புகார்கள் உள்ளன.
கொல்ல சதி: இதற்கிடையே அமெரிக்காவில் இருக்கும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர் கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றவர், இவரைக் கொல்ல சதி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்கா வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிகில் குப்தா இந்திய அரசின் ஊழியர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.