கோலாலம்பூர், அக்டோபர்.25-
கோலாலம்பூரில் தொடங்கியுள்ள 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு சிகரம் வைத்தது போல், வரலாற்றுச் சிறப்புமிக்க தாய்லாந்து-கம்போடியா அமைதி உடன்பாடு நாளை ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகிறது.
ஆசியானின் இரண்டு முக்கிய அண்டை நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையில் நிலவி வந்த எல்லைப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போர் நிறுத்தத்தில் கையெழுத்திடுவதற்கு நாளை மலேசியா வருவதாக தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul அறிவித்துள்ளார்.
இன்று அக்டோபர் 25 ஆம் தேதி மலேசியா வருவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்த தாய்லாந்து பிரதமர் Anutin, அந்நாட்டின் முன்னாள் அரசியார் சிரிகிட் மறைவு காரணமாக பயணத்தை ரத்து செய்தார். எனினும் இன்று சனிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மட்டும் நாளை மலேசியா வருவதாக அறிவித்துள்ளார்.
கையெழுத்து சடங்கு முடிந்தவுடன் நாடு திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாடு, ஆசியான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசியான் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்திடப்படவிருக்கிறது.
ஆசியான் தலைவர் என்று முறையில் மலேசியாவின் தலையீடு, முக்கியப் பங்காற்றியதன் விளைவாக, இரு நாடுகளும் நிபந்தனையின்றி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








