வாஷிங்டன், பிப்ரவரி 22 -
அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவி போலீஸ் ரோந்து வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய அமெரிக்க போலீஸ் அதிகாரி கேலி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க போலீஸ் அதிகாரி மீதான வழக்கை தொடர முடியாது என சியாட்டில் அட்டார்னி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டூலா என்ற மாணவி படித்து வந்தார். அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலை படித்து வந்த ஜானவி கண்டுலா மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி அங்கேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய ரோந்து வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டி வந்தார். விபத்துக்கு பின், சியாட்டி போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய டேனியல், மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய போலீஸ் அதிகாரி டேனியல், "இறந்த பெண் ஒரு சாதாரணமான ஒருவர் தான்.
பெரும் மதிப்பு மிக்க நபர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்" என சிரித்துக்கொண்டே பேசினார். அவரது சட்டையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
விபத்தில் பலியான இந்திய மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கேலியாக பேசிய போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தினர்.