பேங்காக், ஜனவரி.14-
அபுதாபியில் இருந்து தாய்லாந்தின் பூக்கெட் நோக்கிச் சென்று கொண்டிருந்த எட்டிஹாட் விமானம், இன்று தரையிறங்குவதற்குச் சற்று முன்னதாக கடுமையான வான்வழிச் சுழற்சி மற்றும் குலுக்கலுக்கு உள்ளானது.
விமானம் பூக்கெட் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சுமார் 40 நிமிடங்களுக்கு முன்னதாக, எதிர்பாராத விதமாக வளிமண்டல அழுத்த மாறுபாட்டால் அந்த விமானம் கடுமையான குலுக்கலைச் சந்தித்தது.
இதில் விமானத்தில் பயணம் செய்த சில பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. விமானத்தின் உட்புறப் பகுதிகள் சில சேதமடைந்ததாகவும், உணவுக் தட்டுகள் மற்றும் பொருட்கள் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் பூக்கெட்டில் பாதுகாப்பாகத் தரையிறங்கியவுடன், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.








