மாட்ரிட்: அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை, அந்நாட்டின் முன்னணி நிறுவன அதிகாரிகள் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். அதன் விவரம் வருமாறு;
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அந்நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29.1.2024 அன்று தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள்.
ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Rafael Mateo, Manuel Manjón Vilda, CEO - Water Division ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றுமுதலமைச்சர் எடுத்துரைத்தார்.