பாட்னா, டிசம்பர்.07-
சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற சாதனையை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பெற்றுள்ளார். இந்தச் சாதனையை லண்டன் வேர்ல்ட் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பீஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் அரசியலில் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்ததற்காக லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தால் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ்குமார் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவரது அசைக்க முடியாத பொது சேவை, நிலையான நிர்வாகம் மற்றும் பீஹார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; இது பீஹாருக்கு ஒரு வரலாற்று தருணமாகவும் அதன் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.








