பேங்காக், ஆகஸ்ட்.09-
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வேலையற்ற ஆடவர் ஒருவர் தீயிட்டதாகக் கூறப்படும் இரண்டு மலேசிய சுற்றுப் பயணிகள் கடும் தீக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் பேங்காக்கில் உள்ள ஒரு பேரங்காடி மையத்திற்கு முன்புறம் நிகழ்ந்தது.
அந்த பேரங்காடியில் பொருட்களை வாங்கியப் பின்னர் அந்த இரண்டு மலேசியப் பிரஜைகளும் வெளியே காத்திருந்த வேளையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, தன் வசம் வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தின்னர் போன்ற ரசாயனத்தை அந்த இரு மலேசியர்கள் மீது ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக, சந்தேக நபர் தங்களை விரட்டிக் கொண்டு ஓடி வருவதைக் கண்டு, அந்த இரு மலேசியர்களும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.
எனினும் அந்த நபர் தொடர்ந்து விரட்டிக் கொண்டு ஓடி வந்து, அவ்விரு மலேசியர்கள் மீதும் தீயிட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் 26 வயது ஓங் யிக் லியோங் மற்றும் 27 வயது கான் ஸியாவ் ஸேன் என்று அடையாளம் கூறப்பட்ட இரு மலேசியர்கள் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பேங்காக், லும்பினி மாவட்ட போலீஸ் தலைவர் யிங்யோஸ் சுவன்னோ தெரிவித்தார்.
பாதுகாவலராக வேலை செய்து வந்த அந்தச் சந்தேகப் பேர்வழி, வேலையிலிருந்து நீக்கப்பட்ட விரக்தியின் காரணமாக மலேசியர்களைக் கண்டால், உடனே தாக்க முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.