பாங்கோக், செம்டம்பர்.09-
தாய்லாந்து முன்னாள் பிரதமரும் பெருஞ் செல்வந்தருமான Thaksin Shinawatra (தக்சின் ஷினவாத் ) ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2023ஆம் ஆண்டு சிறைத் தவணையை தக்சின் மருத்துவமனையில் கழித்தது சட்டவிரோதம் என்று தாய்லந்து உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்த நாள்களைச் சிறைக் காலமாகக் கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து அரசியல் களத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய தக்சின் குடும்பத்திற்குத் தற்போது அடுத்தடுத்து அடி விழுந்துள்ளது.
தீர்ப்பு அறிவிக்கப்படும் போது தக்சின் நீதிமன்றத்தில் இருந்தார். சில நாள்களுக்கு முன்புதான் தக்சினின் மகள் Paetongtarn Shinawatra (பெடோங்டார்ன் ஷினவாத்) தாய்லாந்துப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
76 வயதான தக்சின் 2001ஆம் ஆண்டு தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ராணுவப் புரட்சியால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.