ஹூஸ்டன், மார்ச்.17-
கடந்த 9 மாதங்களாக அனைத்துலக விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை பூமிக்குத் திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்பும் காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலம் மூலம், நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான பட்ச் வில்மோர் ஆகியோர் அனைத்துலக விண்வெளி நிலையத்தைக் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி அடைந்தனர். 9 நாள்களுக்குப் பிறகு ஸ்டார்லைனர் மூலமே அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவர்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக அனைத்துலக விண்வெளி நிலையத்திலேயே இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஞ்ஞானிகளை பூமிக்குத் திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் நேற்று அனைத்துலக விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி இன்று இரவு 10.45 மணிக்கு அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் சுனிதா, வில்மோர் ஆகியோருடன் மேலும் அமெரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புகிறார்கள்.
நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை புளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்து சேரும் காட்சிகள் அனைத்தும் நேரடியாக நாசா ஒளிபரப்பு செய்யவுள்ளது.








