174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, நடுவானில் கத்திக் குத்துக் காயங்களுடன் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு நாட்டின் உயரிய அமைதிக்கால வீர விருதான அஷோகா சக்ரா வழங்கப் பரிசீலிக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலங்களவை உறுப்பினர் மிலிண்ட் டியோரா கடிதம் எழுதியுள்ளார்.
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃபிலைதுபாய் விமானத்தில், விமானத்தின் துணை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கி விமானத்தைக் கட்டுப்படுத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்து இரத்தம் வெளியேறிய நிலையிலும், விமானத்தின் உயரம் திடீரென குறைந்து கொண்டிருந்தபோது, ஸ்மித் மச்சார் விமானி அறைக் கதவைத் திறந்தார். இதையடுத்து பயணிகளும் விமானப் பணியாளர்களும் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவூதி அரேபியாவில் வட மேற்குப் பகுதியான தபுக்கில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
“மற்றவர்கள் உயிரிழப்பதை நான் அனுமதிக்க முடியாது” என்ற மனநிலையில் தான் செயல்பட்டதாக ஸ்மித் மச்சார், பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொலி உரையாடலில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் அவரது துணிச்சலைக் கெளரவிக்கும் வகையில் அஷோகா சக்ரா விருதுக்கு அவரைப் பரிசீலிக்க வேண்டும் என மிலிண்ட் டியோரா கோரியுள்ளார்.








