பாங்கோக், நவம்பர்.22-
தாய்லாந்தில் நடைபெற்ற, 'மிஸ் யுனிவர்ஸ்' எனப்படும், பிரபஞ்ச அழகிப் போட்டியில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த பாத்திமா போஷ் வாகை சூடினார்.
இவ்வாண்டுக்கான, 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடைபெற்றது. இதில், இந்தியா, மெக்சிகோ, ஜமைக்கா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
இம்மாத முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சுற்றுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. மெக்சிகோ, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள், முதல் 12 இடங்களைப் பிடித்தன.
இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள, 'இம்பாக்ட் சேலஞ்சர்' அரங்கில் இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களில் ஒருவராக இந்தியப் பூப்பந்து தாரகை சாய்னா நேவாலும் இடம் பெற்றிருந்தார்.
முடிவில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ம் ஆண்டுக்கான 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தைத் தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை தாய்லாந்து அழகியும், மூன்றாவது இடத்தை வெனிசுலா அழகியும் பெற்றனர்.
'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற பாத்திமா, அமெரிக்கா மற்றும் இத்தாலியில் பேஷன் டிசைனிங் படித்தவர். அவருக்கு ரொக்கப் பரிசுத் தொகை, சொகுசு பங்களா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவருக்கு கிரீடமும் சூட்டப்பட்டது.








