அடிஸ் அபாபா, நவம்பர்.19-
மலேசியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான உறவுகளை புதிய திசையை நோக்கிக் கொண்டுச் செல்வதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், எத்தியோப்பியா அதிபர் Taye Atske- Selassie Amde- வும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மலேசியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையில் 60 ஆண்டு காலமாக கட்டிக் காக்கப்பட்டு வரும் நல்லுறவை நினைவுகூரும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பாரம்பரிய ஒத்துழைப்பைத் தாண்டி, மென்பொருட்கள், ஹலால் பொருளாதாரம், சைபர் பாதுகாப்பு மற்றும் கூட்டு வளர்ச்சிக்கு இடமளிக்கும் வியூகப் பகுதிகள் போன்ற உயர் மதிப்பிலான துறைகள் புதிய திக்கை நோக்கி நகர்த்தப்படுவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு முக்கிய அரச தந்திர மையமாக எத்தியோப்பியா அங்கீகரிக்கப்பட்டதற்கு இணங்க கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் Addis Ababa- வில் மலேசிய தூதரகத்தை மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் மலேசியாவின் உறுதிப்பாட்டை இது நிரூபிக்கிறது என்று நிதி அமைச்சருமன டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு வர்த்தகப் பயணம் மேற்கொண்டுள்ள டத்தோ ஶ்ரீ அன்வார், தமது பயணத்தின் முதலாவது நாடாக எத்தியோப்பியா தலைநகர் Addis Ababa-விற்கு வருகை மேற்கொண்டு அந்த நாட்டின் அதிபருடன் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினார்.








