கோலாலம்பூர், அக்டோபர்.30-
மலேசியர்கள் இபிஎப். பணத்தை முழுமையாக மீட்பதற்கான வயது வரம்பை 65 ஆக உயர்த்த வேண்டும் என்று உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.
மலேசிய மக்களிடையே அதிகரித்து வரும் ஆரோக்கியமான ஆயுட்காலத்திற்கு ஏற்ப ஓய்வூதியக் கொள்கைகளில் இபிஎப். வாரியம் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.
அதிகமான மூத்தக் குடிமக்கள் கொண்ட ஒரு நாடாக மலேசியா நகர்ந்து கொண்டு இருக்கிறது. 2045 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 65 வயதை கடந்தவர்கள், கிட்டத்தட்ட 14 விழுக்காட்டினராக இருப்பர். இந்த எண்ணிக்கை 2056 ஆம் ஆண்டில் 20 விழுக்காடாக உயர்வு காணும்.
இந்நிலையில் இபிஎப். தனது கொள்கை அமைப்பு முறையில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என்று உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.








